Friday, July 07, 2017

தினம் ஒரு பாசுரம் - 83

தினம் ஒரு பாசுரம் - 83

நிலத்தைச் செறுத்து உண்ணும் நீசக் கலியை நினைப்பு அரிய


பெலத்தைச் செறுத்தும் பிறங்கியது இல்லை என் பெய் வினை தென்


புலத்தில் பொறித்த அப்புத்தகச் சும்மை பொறுக்கிய பின்


நலத்தைப் பொறுத்தது இராமானுசன் தன் நயப்புகழே


--- ராமானுச நூற்றந்தாதி (திருவரங்கத்து அமுதனார்)
 ராமானுச நூற்றந்தாதிப் பாசுரம் ஒவ்வொன்றும் தமிழின் இனிமைக்கும், அதன் சொற்களில் சீர்மைக்கும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது, அதன் பொருளை புரிந்து அறிந்தால், விளங்கும். இது அமுதனாரின் மற்றொரு அற்புதப் பாசுரம். ராமானுஜரின் சீர்மையை, அவதார நோக்கத்தை (திருப்பாற்கடல் மாயனின் துயிலணையான ஆதிசேஷனின் அம்சமாக, இந்த அவனி தழைக்க, அவதரித்தவர் எம்பெருமானார் எனும் ராமானுஜர்) இதை விடச் சிறப்பாகச் சொல்லவியலாது என்பதோடு, செழுந்தமிழ்ச் சொற்களை அமுதனார் கோத்த விதமும் அலாதியானது.  பாசுரப்பொருளை நோக்கினால் புரிபடும். கடைச்சொற்களான ”இராமானுசன் தன் நயப்புகழே” என்பதை பாசுரம் நயமாய் விளக்குகிறது!

பாசுரப் பொருள்:

இராமானுசன் தன் நயப்புகழே - ராமானுஜரின் (அடியவர்க்கு) அருள்/அன்பு/நன்மை தரும் (குணப்)புகழானது,
நிலத்தைச் செறுத்து - இந்த பூவுலகை (பூவுலக மாந்தரை) துன்புறுத்தி
உண்ணும் நீசக் கலியை - தின்று அழிக்கும் கொடுமையான கலிகாலத்தின்
நினைப்பு அரிய - நினைக்கவியலாத
பெலத்தைச் செறுத்தும் - வலிமையை வென்று அடக்கியும், 
பிறங்கியது இல்லை - விளங்கவில்லை (ஒளிரவில்லை)
என் பெய் வினை - என் மிகுதியான பாவங்கள்
தென்புலத்தில் பொறித்த - (காலனின் இருப்பிடமான) எமலோகத்தில் குறித்து வைக்கப்பட்ட
அப்புத்தகச் சும்மை - புத்தகக் கட்டுகளை
பொறுக்கிய பின் - எரித்த பின்னர்
நலத்தைப் பொறுத்தது - நன்மை/பயன் பெற்றது (ஓங்கிச் சிறப்புற்றது!)

பாசுரக்குறிப்புகள்:


நிலத்தைச் செறுத்து உண்ணும் நீசக் கலியை - 

 
எம்பெருமானார் எனும் யதிராசர், கலியால் நலிந்த மாந்தரை உய்விக்க வந்த பெருந்தகை என்பது ஆதாரமான பாசுரச்செய்தி. நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழிப்பாசுரம் அளித்த ஊக்கத்தின் துணை கொண்டு அமுதனார் இப்பாசுரத்தை இயற்றியதாகக் கொள்ளல் தகும்!

பொலிக பொலிக பொலிக
      போயிற்று வல் உயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த
      நமனுக்கு இங்கு யாது ஒன்றும் இல்லை
கலியும் கெடும் கண்டுகொண்மின்
      கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்
மலியப் புகுந்து இசை பாடி
      ஆடி உழிதரக் கண்டோம் 


(பூவுலகே பேருவகையால் பொலிந்ததாம். (கண்ணன் மீதான பக்தி மிகுந்ததால்) உலக உயிர்களின் சாபங்களும், பாவங்களும் தொலைந்து, கலியும் கெட்டதால், நலிவைத் தரும் நரகத்து யமனுக்கு பூவுலகில் வேலை என்பதே இல்லாமல் போனதாம். திருப்பாற்கடல் மாயக்கண்ணனின் பூதகணக் கூட்டங்கள் பூவுலகத்தில் புகுந்து இசையுடன் பாடி, இங்குமங்கும் ஆடி மகிழ்வதைக் காண்கிறோம்) அடியவர்க்கு பெருநம்பிக்கை தரும் அழகிய பாசுரம்.

நம்மாழ்வார் பரந்தாமனை முன்னிறுத்தி அருளியதை, அமுதனார் பகவத் ராமானுஜரை முன்னிறுத்தி அருளுகிறார். வலிமை வாய்ந்த கொடுங்கலியை ராமானுஜர் அடக்கிய பின்னரும், அவர் குண கீர்த்தியானது முழுமை பெறவில்லை என்கிறார். ஏன்?? கலியை வென்றதால், அடியவரின் இப்பிறப்பின் தீவினைகள் மட்டுமே ஒழிந்தன. ஆனால் அடுத்து, ராமானுஜர் முந்தைய பிறப்புகளின் பாவங்களையும் (இதைத் தான் “என் பெய்வினை தென்புலத்தில் பொறித்த அப்புத்தகச் சும்மை” என்கிறார் அமுதனார்!) தன் பேரரருள் வலிமையால் அழிப்பதாகச் சொல்லி, அதனால் உடையவரின் பெரும்புகழ் விகசித்து ஒளிர்ந்ததாக அமுதனார் அற்புதமாக அருளியுள்ளார்!

நயப்புகழே என்று பாசுரம் நிறைவடைகிறது அல்லவா? “நயம்” என்ற மூன்றெழுத்துச் சொல் (பயன்பாடு முன் வைத்து) குறிக்கும் பலவற்றை நோக்கினால், தமிழின் வளமை புலப்படும்!
நயம் = அருள், நன்னயம், விருப்பம், மகிழ்ச்சி, நன்மை, மென்மை, மதிப்பு, அன்பு, பக்தி, நற்பயன், மேம்பாடு, மலிவு, மிகுதி, விளைவு, நுண்மை, இனிமை என பல பொருள்கள். 

---எ.அ.பாலா


பி.கு: நேற்று 11 மணிக்கு இடுகையை எழுதி முடித்த கையோடு, மழை நன்கு பெய்தது.  இனி “தினம் ஒரு பாசுரம்”  அடிக்கடி எழுதலாம்னு யோசனை 😇😇

0 மறுமொழிகள்:

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails